Sunday, August 3, 2025

பப்புவா நியூ கினி கதைகள் -2

மூமு 

பப்புவா நியு கினி மக்கள் பாரம்பரியமாக மூன்று வகையில் சமையல் செய்கிறார்கள். சாதாரணமாக இறைச்சி, கிழங்குகள், காய்கறிகள் மற்றும் கீரைவகைகளை ஒன்றாகப் போட்டு அவித்து பின்னர் உப்பு சேர்த்து உண்கிறார்கள். பெரும்பான்மை பப்புவா நியு கினியன்களுக்கு எம்மைப்போல மசாலா சேர்த்து சமைக்கத் தெரியாது. 

அடுத்ததாக உணவை நெருப்பில் வாட்டி உண்கிறார்கள். அவர்களது உணவில் கிழங்குகள் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதால் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நெருப்பை மூட்டி கிழங்குகளை சுட்டுச் சாப்பிடுகிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் உணவை நெருப்பில் சுட்டுச் சாப்பிடுவது ஒரு தனிச்சுவைதான். பாரம்பரிய விறகடுப்பில் இருந்து எரிவாயு அடுப்பிற்கு மாறியதில் நாங்கள் இதைத் தொலைத்துவிட்டோம்.  சிறுவயதில் அடுப்புத் தணலில் சுட்டுச் சாப்பிட்ட உணவின் சுவை இன்னமும் நாக்கில் இருக்கிறது. 

அடுத்த வகைதான் பப்புவா நியூ கினி தனித்துவம், மூமு. கிட்டத்தட்ட oven ல் bake செய்வது போன்றது. அதற்காக போறணை போலல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைதான் மூமுவை சுவாரஸ்யமாக்குகின்றது. முதலில் ஆற்றங்கரையில் கிடைக்கும் உருளைக்கற்களைப் பொறுக்கியெடுத்து நெருப்பிலிட்டு நன்றாக சூடாக்குகின்றனர். அதேநேரத்தில் மண்ணில் குழி தோண்டி தயார் செய்கின்றனர். மூமு செய்யவேண்டிய இறைச்சி, கிழங்குகள் மற்றும் கீரைவகைகளையும் தயார் செய்கின்றனர். கற்கள் நன்றாக சூடானதும் அரைவாசி அளவு கற்களை குழியின் அடியில் பரப்பி அதன்மேல் வாழையிலையால் மூடி இறைச்சி மற்றும் கிழங்குகளை அடுக்குகின்றனர். மேலே மறுபடியும் மிச்சமுள்ள சூடான கற்களை அடுக்கி வாழையிலையால் மூடியபின் கடைசியில் மேலே மண்ணைப் போட்டு மூடிவிடுகின்றனர். 



அண்ணளவாக இரண்டு மணிநேரத்தின் பின் குழியைத்திறந்து நன்கு வெந்த உணவுகளை வெளியே எடுக்கின்றனர். கிழங்குகள் ஊனின் கொழுப்பில் இணைந்து சுவையாக இருக்கும். பப்புவா நியூ கினி பன்றி இறைச்சியும் தனித்த சுவைதான். இயற்கையாக விளையும் காய்கள் மற்றும் கிழங்குகளை அவற்றுக்கு உணவாகக் கொடுப்பதால் அந்த சுவை போலும். 


மூமு செய்வது பப்புவா நியூ கினியன்களுக்கு ஒரு கொண்டாட்டம். ஒன்றுகூடல்கள் மற்றும் கொண்டாட்டங்களில் அனைவரும் இணைந்து மூமு செய்கின்றனர். மூமுவில் ஆபத்தும் இல்லாமல் இல்லை. கற்களைச் சூடாக்கும்போதும் சூடான கற்களை கையாளும்போதும் கற்கள் வெடித்துச் சிதறுவதும் உண்டு. ஆனால் அவர்களது கொண்டாட்ட மனநிலையில் அது அவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. தயார் செய்யும் இறைச்சிக்கு அளவாக மூமுவின் அளவும் இருக்கும். ஒருவாரம் முன்னால் முப்பது பன்றிகள் மூமு செய்யப்பட்டதை எமது தங்குமிடத்தில் இருந்து அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. நாள்முழுவதும் அவர்களின் உற்சாக குரல்கள் கேட்டவண்ணம் இருந்தது. மூமு செய்த இறைச்சிகள் ஓரிரண்டு நாட்களுக்கு கெடாமல் இருக்கும். மூமு ஒரு சமையல் முறைமட்டுமல்ல அது ஒரு கொண்டாட்டம்.



Sunday, July 27, 2025

பப்புவா நியூ கினி கதைகள் -1

 பன்றி எண்ணெய்.

பன்றிக் கொழுப்பை உருக்கி எடுக்கப்படுகிறது பன்றி எண்ணெய். பப்புவா நியூ கினி மக்களின் வாழ்வோடு இரண்டரக் கலந்தது பன்றி எண்ணெய். தமது கடினமான சுருள் முடியை இலகுவாக கையாள்வதற்கும் முடி நன்றாக வளர்வதற்கும் இதை முடியில் தடவுகிறார்கள்.  பன்றி எண்ணெயின் வாசம் பிடிக்காத சிலர் இதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாவிப்பமுதுண்டு. காயங்கள் மற்றும் வீக்கங்களுக்கும் பன்றி எண்ணெயயை தடவுவது அவர்களது பாரம்பரியம். பப்புவா நியூ கினி மக்களின் வாழ்வோடு பன்றி ஒரு பிரிக்கமுடியாத அம்சம். இதனால் பன்றி எண்ணெய் ஒரு செலவில்லாத பொருளும்கூட. தமது ஆரோக்கியத்திற்கு பன்றி எண்ணெயும் ஒரு காரணம் என்பது அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கை. நானும் தலையில் சிறிது தடவிப் பார்ப்போம் என நினைத்து பின்னர் ஏன் இந்த வேண்டாத வேலை என்று எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். நான் கண்ட பல வயதான பப்புவா நியூகினியர்களுக்கு வழுக்கை விழுந்திருப்பதற்கு ஒருவேளை பன்றி எண்ணெயும் காரணமோ என மனதில் தோன்றியதால் பின்வாங்கிவிட்டேன்.  ஆனாலும் ஒருமுறை உபயோகித்துப் பார்க்கவேண்டும். பார்ப்போம்.