வெப் சீரிஸ்களில் நார்கோஸ் ஒரு குறிப்பிடத்தக்க தொடர். கட்டாயம் பார்க்க வேண்டியதும்கூட. போதைப்பொருளான கொகைன் எப்படி கொலம்பியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு உலகின் பிறநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது மற்றும் அதனை கொலம்பியாவும் அமெரிக்காவும் முறியடிக்க முயற்சிப்பதை உண்மைச் சம்பவங்களை சற்று புனைவு சேர்த்து சொல்கிறார்கள். நெற்ஃபிளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது. மூன்று சீசன்கள் 2015 முதல் 2018 வரை வெளியாகியிருக்கிறது.
பாப்லோ எஸ்கோபரை பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். மிகப்பிரபலமான கொலம்பிய கொகைன் உற்பத்தியாளன். முதலில் சிறுவளவில் உற்பத்தியை தொடங்கி உற்பத்தியை எவ்வாறு சர்வதேச தேவைற்கேற்ப விரிபுபடுத்துவதும் எஸ்கோபரின் வீழ்ச்சியும் காட்டப்படுகிறது. அமெரிக்க DEA Agent பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இடையிடையே உண்மை காணொளிகளும் காட்டப்படுகிறது. ஆரம்பத்தில் சிறிது அசுவாரசியமாக செல்லும் கதை ஐந்து ஆறு எபிசோட்களின் பின் சுவாரசியமாக செல்கிறது. காரணம் எஸ்கோபரை பற்றி ஓரளவு முன்னரே தெரிந்திருப்பதும் மற்றும் விபரணப்படம் (documentary) போல இடையிடையே வரும் காட்சிகள் பழக்கமாக சிறிது நேரம் எடுக்கிறது. தொடங்கிவிட்டு மூன்று நான்கு எபிசோட்களில் நிறுத்தியவர்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு திருப்தி கிடைக்கும். பலவித அரசியல்களைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும்.
எஸ்கோபர் பற்றி சிறிது கேள்விப்பட்ட எனக்கு Medellín Cartel, Cali Cartel, narcos trafficking போன்றவற்றை புதிதாக இருந்தது. அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக கொலம்பிய அரசாங்கம் எஸ்கோபரை கைதுசெய்ய தயாரானதும் தலைமறைவான எஸ்கோபர் வன்முறையை கையிலெடுத்ததும் கொலம்பியா வேறுவழியின்றி எஸ்கோபர் விதித்த நிபந்தனைகளுடன் வீட்டுக்காவலில் வைக்கிறது. பெயருக்குத்தான் சிறையேதவிர எஸ்கோபரின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்கின்றன. அரசாங்கத்துக்கு ஒரே ஆறுதல் நாட்டில் வன்முறைகள் குறைவடைந்ததுதான். இத்துடன் முதல் சீசன் முடிவடைகிறது.
ஆனால் அமெரிக்க DEA அதிகாரிகளுக்கு திருப்தி இல்லை. இன்னும் அமெரிக்காவுள் வரும் கொகைன் அளவு குறைத்தபாடில்லை. ஆனால் கொலம்பியாவில் DEA சுதந்திரமாக செயல்படமுடியாது. ஊழலில் திளைக்கும் கொலம்பிய அதிகாரிகளைத்தாண்டி அங்கிருக்கும் நேர்மையான அதிகாரிகளுடன் சேர்ந்து தமது பணிகளை செய்கிறார்கள். கொலம்பிய அதிபர் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக இருப்பதால் வீட்டுச்சிறையில் இருக்கும் போது எஸ்கோபர் செய்த கொலைக்காக கைது செய்து வேறுசிறைக்கு மாற்ற முயற்சிக்கும்போது இரகசிய சுரங்கப்பாதை மூலம் எஸ்கோபர் தப்பிக்கிறான்.
இந்த இடத்தில் அப்போதைய கொலம்பிய அரசியல் நிலைமையை நோக்கவேண்டும். போதைப்பொருள் பிரச்சினை மற்றும் அதனால் விளையும் வன்முறை ஒருபக்கம். எல்லையில் உள்ள கம்யூனிஸ்ட்களை வேட்டையாட தனியார் இராணுவ குழுக்கள். இந்த இராணுவ குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுத உதவி செய்வது CIA. அமெரிக்காவுக்கு கம்யூனிஸ்ட் என்றாலே ஆகாது என்பது உலகறிந்த உண்மை. கொலம்பியா CIA இன் சிலமுடிவுகளால் DEA ன் கைகள் கட்டப்படுவது இதில் இன்னொரு நகைமுரண். இப்படி இரு அமெரிக்க அமைப்புகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளையும் காட்சிப்படுத்த தவறவில்லை இத்தொடர். இன்னுமொன்று அமெரிக்கர்கள் தம்மையும் தமது நாட்டையும் பெருமையாகவும் மற்றையோரை சிறுமையாக நினைப்பதையும் கூட காட்சிப்படுத்தியுள்ளனர். எஸ்கோபரின் மனைவி மூலமாக தலைமறைவாக இருக்கும் எஸ்கோபரின் செய்மதி தொலைபேசியின் frequency யை கண்டடைந்த பாதுகாவலர் agent Murphy யிடம் சொல்லும்போது தெனாவெட்டாக மேர்பி கேட்பார் “இந்த தகவலுக்காக என்ன வேண்டும்? அமெரிக்க விசாவா அல்லது அமெரிக்காவில் வேலையா? ஆனால் அதுவெல்லாம் தரமுடியாது” என்று சொல்ல அந்த கொலம்பியன் சொல்லுவார் “எல்லோரையும் அப்படியா நினைக்கிறீர்கள்? எனக்கு எதுவும் வேண்டாம். எஸ்கோபரின் குடும்பம் மிகவும் துன்பப்படுகிறது. எஸ்கோபரை கண்டுபடித்து கொல்லுங்கள் முதலில்” என்பார்.
கைதுசெய்ய முற்படும்போது தப்பியோடும் எஸ்கோபர் அந்நாட்டு இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படுவார். எஸ்கோபரின் Medellín Cartel ஐ வீழ்த்தியதில் முன்னின்று உழைத்தவர் DEA Agent Javier Peña அடுத்தவர் Stephen Murphy. இரண்டாவது சீசன் எஸ்கோபரின் வீழ்ச்சியுடன் முடிகிறது.
மூன்றாவது சீசன் Cali cartel இன் வீழ்ச்சியை சொல்கிறது. உண்மையில் ஏஐன்ட் பென்யா கலி காட்ரலை ஒடுக்குவதில் சம்பந்தப்படவில்லை. ஆனால் சீரிசில் பென்யாவின் கதாபாத்திரம் ஒரு புனைவு. மெடயின் காட்ரல் அழிக்கப்பட்டதும் இப்போது வர்த்தகத்தில் முதலிடம் கலி காட்ரலுக்கு. அமெரிக்காவுக்கு இன்னமும் தலையிடி குறைந்தபாடில்லை. Cali cartel ன் பங்குதாரர் நால்வர். Gilberto Rodríguez Orejuela, Miguel Rodríguez Orejuela, José Santacruz Londoño, Hélmer Herrera. இதில் முக்கியமானவர்கள் ரொட்ரிகோ சகோதரர்கள்.
கலி காட்ரல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு போதைமருந்து உற்பத்தி ஸ்தாபனம். அவர்களது கணக்குகள் முறையாகவும், கொடுக்கப்பட்ட இலஞ்சங்கள் மறைசொற்களாலும் பேணப்பட்டது. அவர்களிடம் திறமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குழு ஒன்றும் இருந்தது. இந்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குழு ரஷ்யாவின் KGB உளவுத்துறைக்கு நிகராக அமெரிக்காவால் கூறப்பட்டது. Cali Cartel ஐ முறியடிப்பதில் பெரிய தலைவலியே அவர்கள் அரசாங்கத்தின் மேல்மட்டம் வரை வழங்கிய இலஞ்சம். அந்த நேரத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் கலி காட்ரலின் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி கொலம்பிய ஜனாதிபதிக்கு நெருக்கடி கிளம்பியது. என்றால் அரசாங்கத்தில் விளையாடிய இலஞ்சத்தின் அளவை நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். CIA வேறு தமது இலாபங்களுக்காக DEA உடன் முரண்பட்டது. இதனூடாக அமெரிக்கா உலகளவில் தனது தேவைகளுக்கூடாக தன் சொந்த நாட்டுமக்களையே பணயம் வைப்பதை புரிந்துகொள்ளலாம்.
நார்கோஸ் சீரிஸ் ஏன் முக்கியத்துவம் பெறுகிறதென்றால் உண்மைச் சம்பவங்ககளை விறுவிறுப்பாக காட்டியதை விட அது பேசும் அரசியல். எண்பதுகள் தொண்ணூறுகளில் தென்னமரிக்க நாடுகள் பற்றிய ஒரு பார்வை கிடைப்பதுடன் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான புரிதல் கிடைக்கும் என்பது நிச்சயம்.
No comments:
Post a Comment